கடந்த 20 மாதங்களில் 1610 போலி பயண ஆவணங்களை துபாய் இமிகிரேஷன் கைப்பற்றியுள்ளது!
துபாய்: கடந்த 20 மாதங்களில் பயணிகளிடம் இருந்து 1,610 போலி பயண ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக துபாய் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான துபாய் பொது இயக்குநரகத்தின் (துபாய் எமிக்ரேஷன்) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மரி தெரிவித்துள்ளார்.
ஜிடிஆர்எஃப்ஏவின் கீழ் உள்ள ஆவணப் பரீட்சை மையம் மற்றும் பல்வேறு போலிகளைக் கண்டறிய பயிற்சி பெற்ற பணியாளர்களின் உதவியுடன் போலி ஆவணங்கள் பிடிபட்டதாக அவர் தெரிவித்தார்.
போலி பயண ஆவணங்களைக் கண்டறிவது பாஸ்போர்ட் அதிகாரிகளின் முக்கிய பணி. கடந்த ஆண்டு 761 போலி பயண ஆவணங்களும், இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 849 போலி பயண ஆவணங்களும் பிடிபட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் விளக்கமளித்தார். துபாய்க்கு வருவோரை சிறந்த முறையில் வரவேற்கவும், எல்லைகளில் போலிகளை தடுக்கவும் துபாய் விமான நிலையங்களில் 1357 உயர் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மரி கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மகிழ்ச்சிக்கான தளமாகவும், ஆராய்ச்சியாளர்களுக்கான இடமாகவும், பாதுகாப்பு மற்றும் அமைதியின் சங்கமமாகவும் உள்ளது. பாஸ்போர்ட் அதிகாரிகள் அன்பாகவும், பயணிகளை நன்றாக நடத்தவும், புன்னகைக்கவும் வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.