குளிர்காலத்தில் தூக்கத்திலிருந்து சீக்கிரம் எழ முடியவில்லையே ஏன்? - அறிவியல்பூர்வ காரணம் என்ன?
குளிர்ந்த குளிர்காலத்தில் போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கும் சுகமே தனிதான். இந்த தூக்கத்திலுருந்து சீக்கிரம் நம்மால் எழு முடியவில்லையே ஏன்?
ஆக்ஸ்போர்டு பேராசிரியர் ஜூலியா லிண்ட்சேக் இதற்கு காரணமாக பகிரப்பட்ட லிங்க்ட்இன் விளக்கப் பதிவு/இடுகை, காலையில் எழுந்ததை வெறுக்க வைக்கும் மனித உயிரியல் கடிகாரத்தைப் பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்குகிறது. காரணத்தை மட்டுமின்றி, அது குளிர்கால சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கான தீர்வுகளையும் வழங்குகின்றன.
மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் உடல் கடிகாரங்கள் எனப்படும் உயிரியல் கடிகாரங்கள் இருப்பதை லிண்ட்சே வெளிப்படுத்துகிறார். இந்த உயிரியல் கடிகாரம் தான் நமது உடலின் செயல்பாடுகளை 24 மணி நேர சுழற்சியில் இயக்குகிறது. இது நமது மூளையாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. உடல் கடிகாரம் சூரிய ஒளியின் உதவியுடன் இந்த சுழற்சியை பராமரிக்கிறது. இது பகலில் சுறுசுறுப்பாக இருக்கவும் இரவில் தூங்கவும் உதவுகிறது.
உயிரியல் கடிகாரம் மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதன் மூலம் தூக்கத்தைத் தூண்டுகிறது. "மெலடோனின் உற்பத்தி ஓரளவு வெளிச்சத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. மனிதர்கள் இருண்ட மாலை நேரங்களில் அதிக அளவு மெலடோனின் உற்பத்தி செய்கிறார்கள். இந்த உற்பத்தி நள்ளிரவில் உச்சத்தை அடைகிறது. காலையில் கண்கள் வெளிச்சத்தில் இருக்கும்போது மெலடோனின் உற்பத்தி குறைகிறது," என்று அவர் விளக்கினார்.
எனவே தான், குளிர்காலத்தில் சீக்கிரம் எழுவதற்கு நாம் ஒளி அல்லது சூரிய ஒளியின் உதவியை நாட வேண்டியது அவசியம். அதற்கு நாம் தூங்கும் அறையை தயார் செய்ய வேண்டும். சூரிய ஒளி அறைக்குள் நுழைவதற்கு திரைச்சீலைகளை நகர்த்தலாம் அல்லது ஜன்னல்களை ஓரளவு திறக்கலாம்.
செல்போன் அல்லது ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிச்சம் மாலை மற்றும் இரவில் மெலடோனின் உற்பத்தியை தாமதப்படுத்தும் என்று லிண்ட்சே கூறுகிறார். எனவே, மாலை நேரங்களில் ஃபோன் உபயோகத்தை குறைக்கவும், போனின் திரையிலிருந்து கண்களை பாதுகாப்பதன் மூலம் இயற்கையான மெலடோனின் உற்பத்தி மூலம் இனிய தூக்கத்தை அடையலாம்.