துபாயில் ஆபாச தளத்தை பார்த்ததாக கூறி போலீஸ் பெயரில் இந்தியரிடம் மோசடி!
துபாய்: துபாயில் ஆபாச தளத்திற்கு சென்றதை போலீசார் கண்டுபிடித்ததாக கூறி மெசேஜ் அனுப்பி இந்தியர் ஒருவரிடம் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. சட்ட நடவடிக்கையை தவிர்க்க கூடிய விரைவில் பணம் செலுத்த வேண்டும் என்பதே அந்த குறுஞ்செய்தி. அப்படி ஒரு குறுஞ்செய்தியைப் பெற்ற ஒருவர் அதில் உள்ள வங்கிக் கணக்கிற்கு 12,500 திர்ஹம் அனுப்பிய சம்பவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் துபாயில் உள்ள ஊடகப் பணியாளர் RJ Fazlu.
துபாய் அல் பர்ஷா காவல் நிலையம் லெப். கர்னல் முஹம்மது ஹசன் பெயரில் இந்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஆபாச இணையதளங்களுக்கு சென்று விபச்சாரிகளை தேடியிருப்பதாகவும், இவை அனைத்தையும் போலீசார் கண்காணித்து வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. உங்கள் இருப்பிடம் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அதன் விளைவுகளை நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரும் சந்திக்க நேரிடும். மேலும் வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமானால் கீழே உள்ள லிங்கில் சென்று ஐந்து நிமிடங்களுக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி வந்தவுடன் அதன் உண்மைத் தன்மையை விசாரிக்காமல் அந்த லிங்கில் சென்று அபராதத்தை செலுத்தியுள்ளார் அந்த நபர். ஏன் இவ்வளவு அவசரமாக அபராதம் செலுத்தினீர்கள் என்று கேட்டால், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பதில் வந்ததாகவும், காவல்துறை கண்டுபிடித்ததால் அபராதத்தை விரைவில் செலுத்தி பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது என்றும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், RJ Fazlu, இதுபோன்ற செய்திகளைப் பெறும்போது, அவை போலியானதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று கூறுகிறார். நேரிடையாக காவல் நிலையத்திற்குச் சென்று விசாரிக்கலாம் அல்லது காவல் எண்ணை அழைத்து, பணம் செலுத்துவதற்கான இணைப்பு கிடைத்திருப்பதாகவும், இது உண்மையா என்று பார்க்க அழைக்கிறேன் என்றும் கூறி விஷயத்தை விசாரிக்கலாம் என்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டுமல்ல எந்த வளைகுடா நாட்டிலும் இதைச் செய்யலாம் ஆகவே வெளிநாட்டவர்கள் இத்தகைய சைபர் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும்.
View this post on Instagram