அபுதாபியில் கட்டுமானத் துறை பொறியாளர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!
அபுதாபி: அபுதாபியில் கட்டுமான துறையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஆன்லைன் போர்ட்டலான TAMM தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அபுதாபி நகராட்சி தெரிவித்துள்ளது. இந்த பதிவு அட்டை உள்ளவர்கள் மட்டுமே கட்டுமான துறையில் பொறியாளர்களாக பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
கட்டுமானத் துறையின் சேவைத் தரம், பாதுகாப்பு மற்றும் தொழில்முறை சிறப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் கட்டடக்கலை பொறியாளர்களும் பதிவு செய்ய வேண்டும்.
சான்றிதழ் அல்லது பதிவு அட்டை உள்ளவர்கள் மட்டுமே பொறியாளர் விசாவைப் பெற முடியும். மற்ற பதவிகளில் இருப்பவர்கள் பொறியாளர்களாக பணிபுரியக்கூடாது.
2 வகை:
கட்டுமானத் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு பொறியாளர் அட்டையும், இல்லாதவர்களுக்கு பயிற்சி பொறியாளர் அட்டையும் வழங்கப்படும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கல்வி அமைச்சகத்திடம் இருந்து சமமான சான்றிதழ் பெறாத பொறியியல் பட்டதாரிகளுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படும்.
30 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படாத தற்காலிக உரிம விண்ணப்பங்கள் மற்றும் 90 நாட்களுக்குள் முடிக்கப்படாத நிரந்தர உரிம விண்ணப்பங்களும் ரத்து செய்யப்படும்.
பொறியாளர், பார்ட்னர் மற்றும் அலுவலக மேலாளர் பதவியில் இருப்பவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பிற ஆவணங்கள்
எழுத்துச் சான்றிதழ், தொழிலாளர் அட்டை, ஐக்கிய அரபு அமீரக பொறியாளர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கான சான்று, ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பு விசா அல்லது முதலீட்டாளர் அட்டை, வேறொரு அமீரகத்தில் பணிபுரிந்தால் பொறியியல் உரிமம், கல்வி அமைச்சகத்தின் சமச் சான்றிதழ், வர்த்தக உரிம நகல் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
பெயர், முகவரி, கல்வித் தகுதி, நிறுவனத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற தகவல்களை அளித்து Tamm Portal இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி மற்றும் பணி அனுபவ சான்றிதழுக்கான ஆவணங்கள், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
சான்றளிக்கப்பட்ட பணி அனுபவ சான்றிதழ் தேவை
வெளி நாடுகளில் பணி அனுபவம் இருந்தால், வெளியுறவு அமைச்சகம் சான்றளிக்க வேண்டும்.
நிறுவனத்திற்கு நன்மை; பொறியாளர்களுக்கு செலவு
கட்டுமானப் பணிக்கான டெண்டர் எடுப்பதற்கு, நிறுவனத்தில் பயிற்சிப் பொறியாளர்கள், ஆலோசனைப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் ஆகியோரில் குறிப்பிட்ட சதவீதம் இருக்க வேண்டும். எனவே, பதிவு மூலம் நிறுவனம் பயனடைகிறது. ஆனால் செலவும் தனிநபர்களுக்கானது.
பொறியியல் சங்கத்தின் பதிவு மற்றும் உறுப்பினர் விதிமுறைகளின்படி, தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை சான்றளிக்க அதிக கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட பொறியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 12,000 திர்ஹம் வேண்டும் என்ற சட்டத்தை பெயரளவிலான நிறுவனங்கள் மட்டுமே கடைபிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.