போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் மோசடி! - பஹ்ரைனில் 2 வெளிநாட்டவர்கள் சிறையில் அடைப்பு!

போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மூலம் மோசடி! - பஹ்ரைனில் 2 வெளிநாட்டவர்கள் சிறையில் அடைப்பு!

மனாமா: சமூக வலைதளங்களில் வேலைவாய்ப்பு விளம்பரம் செய்து மோசடி செய்த இரு வெளிநாட்டவர்களுக்கு பஹ்ரைனில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தியதற்காக அவர்கள் குற்றவாளிகள் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கில் கீழமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றவாளிகளான அவர்கள் இருவருக்கும் 3000 தினார் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தண்டனைக் காலம் முடிந்ததும் அவர்கள் பஹ்ரைனில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள். பப்ளிக் பிராசிகியூஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமூக வலைதளங்களில் நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை வாய்ப்பு என்று விளம்பரம் செய்து மக்களைக் கவர்ந்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, வேலையில்லாதவர்கள் பஹ்ரைனுக்கு அழைத்து வரப்பட்டனர். தேவையான அனுமதிகள் அல்லது உரிமங்கள் இல்லாமல் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்தனர். விசாரணையில் இருவரும் குற்றவாளிகள் என தெரியவந்தது. ஆனால், அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

பொய்யான வாக்குறுதிகளில் சிக்கி பஹ்ரைனுக்கு வரும் பலர் சுரண்டலுக்கு ஆளாகும் சூழ்நிலையில் அதிகாரிகள் தற்போது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.