பித்தம் அப்படின்னா என்ன..?

பித்தம் அப்படின்னா என்ன..?

நோய் நாடி, நோய் முதல் நாடின்னு சொல்வாங்க.. அதாவது 2000, 3000 வருஷத்துக்கு முன்னாடி நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்த நம்ம முன்னோர்கள், கிருமிகள், ஒவ்வாமை, இரத்தத்தில் உள்ள அணுக்கள், செயல்பாடுகள், இது பற்றிய தெளிவு இல்லாத காலகட்டத்தில் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தி ஐந்து வகையான கூறுகளால் உடல் இயங்குகிறது என்கிற ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டார்கள்.

நிலம் (உடல்), நீர் (உடல் செயல்பாடு), காற்று (மூச்சு), நெருப்பு (செரிமானம்), ஆகாயம் (சிந்தனை) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உடலின் செயல்பாட்டை வாதம் (மூட்டுக்கள், மலம் கழித்தல்), பித்தம் (செரிமானம் உடல் சூடு),  கபம் (சளி, சுவாசம்)ன்னு மூன்றாக பிரித்துக்கொண்டார்கள். இதை நாடி துடிப்பில் உள்ள வித்தியாசத்தை வைத்து முடிவு செய்தார்கள். அந்த அடிப்படையில் மருத்துவமும் பார்த்தார்கள். 

இன்றைக்கும் சித்த மருத்துவம் அதே கோட்பாட்டுடன் தான் செயல்படுது. இதை holistic approach என்று சொல்வார்கள். மாடர்ன் மெடிசின் செய்வது diagnostic approach நோயை கண்டு பிடித்து வைத்தியம் செய்வது. ஆனால், சித்த மருத்துவத்திற்கு நோயை பற்றி கவலை இல்லை; அது ஒரு மனிதனின் வாழ்வியலை சரி செய்வது மூலமாக எந்த நோயும் வராமல் காக்கலாம் என்று நம்புகிறது. அதாவது முழுமையாக ஒரு மனிதனை சரி செய்வது (holistic). இதே பாணியை தான் ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற பெரும்பாலான மாற்று மருத்துவங்கள் கையாள்கின்றன. இதனை மாடர்ன் மருத்துவத்தோடு நாம் போட்டு குழப்பிக் கொள்கிறோம். 

பித்தம் என்பது என்ன? எப்படி சரி செய்வது என்ற கேள்வியே தவறு. அது நோய் அல்ல. அது ஒரு மனிதனின் உடற்கூறு. நாடியில் பித்த உடம்பாக இருந்தால் அதனால் எந்த தொந்தரவும் இல்லாத நபருக்கு மருந்துகள் தேவையில்லை.

ஒரு வேளை உங்களுக்கு செரிமானம் ஆகவில்லை என்று மருத்துவரிடம் போகும் போது அவர் பித்தம் அதிகமாக இருப்பதாக நினைத்தால் உங்களுக்கு திரிகடுகு, அஷ்ட சூரணம் என கொடுத்து பித்தத்தை குறைத்து செரிமானத்தை சரி செய்வார்.

ஆகவே, பித்தம் என்பது நோய் அல்ல. நோயுற்றவன் உடலில் பித்தம் அதிகம் என்றால் தான் மருந்துகள் கொடுக்க வேண்டும்.

நன்றி: Dr. M. Saravana Kumar, BHMS, MD (ped).,