FIFA 2022 சாம்பியன் தொடரில் அபாரமாக விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட விருது விவரங்கள்!
தங்க பந்து (Golden Ball)
கத்தார் உலகக்கோப்பை தொடரில் அர்ஜெண்டினா அணியின் லியோனெல் #மெஸ்ஸி மொத்தம் 7 கோல்கள் அடித்தார். அத்துடன், உலகக் கோப்பை வரலாற்றில் லீக் சுற்று, நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி என அனைத்து சுற்றுகளிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
குறிப்பாக, உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற மகத்தான சாதனையும் படைத்தார். இதன் மூலம், கத்தார் உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்தை GOLDEN BALL வென்றார். 2014-ஐ தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் இந்த விருதை பெற்றுள்ளார்.
தங்க காலணி (Golden Boot)
இறுதிப் போட்டியில் தனியாளாக போராடிய #பிரான்ஸ் வீரர் #எம்பாபே, ஹாட்ரிக் கோல் அடித்து மிரட்டினார். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜெஃப் ஹர்ஸ்ட்-க்கு அடுத்து இறுதிப் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரராக ஜொலித்தார்.
இத்தொடரில், மொத்தம் 8 கோல்கள் அடித்து, "தங்க காலணி" விருதை எம்பாபே வென்றார்.
தங்க கையுறை (Golden Glove)
அர்ஜெண்டினா அணி தனது முதல் லீக் போட்டியில் சவுதி அணியிடம் தோற்றாலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றது. கோல் கீப்பர் என்ற முக்கிய இடத்தில் இருந்து அரண் போல் செயல்பட்டு, அர்ஜென்டினாவை கரை சேர்த்த அந்த அணியின் மார்டினெஸ், சிறந்த கோல் கீப்பருக்கான "தங்க கையுறை" விருதை வென்றார்.
இளம்வீரர் (Young Player)
அதேபோல் அஜென்டினா அணியின் 21 வயதான பெர்னாண்டஸ் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றார்.
உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமல்லாது கோல்டன் பால், கோல்டன் கிளவ், இளம் வீரர் உள்ளிட்ட தொடரின் மூன்று விருதுகளையும் அர்ஜெண்டினா வீரர்கள் வென்றதை அந்த அணியின் ரசிகர்கள் பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்.