சவுதி: செக்யூரிட்டி ஊழியர்கள் தொடர்ந்து 5 மணிநேரங்கள் பணிபுரிய தடை!
செக்யூரிட்டி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பணிச்சூழலை எளிதாக்கும் விதமாக புதிய விதிமுறைகளை அங்கீகரித்து சவூதி அரேபியாவில் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அமைச்சர் அஹ்மத் அல்-ராஜி மூலம் வெளியிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி பணியாளர்களுக்கு தொடர்ந்து ஐந்து மணிநேரங்கள் பணிபுரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பணியாளர்களுக்கு இடைவேளை கண்டிப்பாக விடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் செக்யூரிட்டி வேலையில் பணிபுரிபவர்கள் ஓய்வு, பிரார்த்தனை மற்றும் உணவு ஆகியவற்றிற்கு இடைவேளை கொடுக்கப்படாமல் ஐந்து மணிநேரம் தொடர்ந்து பணிபுரிவதில் இருந்து தடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் இடைவேளையானது அரை மணி நேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் வேலை செய்யும் இடங்களில் சீருடைகளை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சூரியன் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தைத் தடுக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான நடைமுறைக் கையேட்டில் கூறப்பட்டுள்ளவற்றுக்கு நிறுவனங்கள் இணங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, செக்யூரிட்டி வேலை பார்ப்பவர்களின் பணிச்சூழல் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை
- முதலாவது மால்கள் மற்றும் வங்கிகள் போன்ற கட்டிடத்தினுள் வேலை பார்க்கும் உள் சூழல்.
- இரண்டாவதாக, கட்டிடங்களுக்கு வெளிப்புறத்தில் பணிபுரியும் வெளிப்புறச் சூழல்,
- மூன்றாவதாக, நகரில் இருந்து தொலைதூரத்தில் இருக்கும் கட்டிடங்கள் அல்லது கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடங்களில் பணிபுரியும் சூழல் போன்றவை ஆகும்.
மேற்கண்ட பணிச்சூழல்களின் அடிப்படையில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உடல் உபகரணங்கள் பற்றிய விபரங்களும் இந்த விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
செக்யூரிட்டி துறையில் பணியின் தரத்தை உயர்த்துவதற்கும், அதன் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், இந்த பணிகளில் தொழிலாளர்களின் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிப்பதை இந்த முடிவு நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அமைச்சகத்தின் இணையதளம் மூலம் இந்த முடிவை வெளியிட்ட நாளிலிருந்து 180 நாட்களுக்கு மிகாமல், இந்த விதிமுறைகளுக்கு இணங்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் துறை நிறுவனங்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அமைச்சகத்தின் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கவும், நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.