பஹ்ரைனில் வெளிநாட்டினரை அடித்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது!

பஹ்ரைனில் வெளிநாட்டினரை அடித்து மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது!

மனாமா: பஹ்ரைனில் பல வெளிநாட்டவர்களை அடித்து, பணத்தை கொள்ளையடித்த நால்வர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர்கள் தலைநகர் கவர்னரேட்டில் இருந்து கைது செய்யப்பட்டனர். கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் 18 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள். மோசடி செய்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இவர்கள் பல வெளிநாட்டவர்களிடம் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்களை அடித்து அவர்களது பணம், பணப்பைகள், வங்கி அட்டைகள் மற்றும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கமாகும். இதுபோன்ற சம்பவங்கள் தலைநகர் கவர்னரேட் முழுவதும் பதிவாகியுள்ளன. பல புகார்கள் கிடைத்ததையடுத்து உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக ஆதாரங்களை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு பின்னர் அவர்களை கண்டுபிடித்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.