பால்கனியில் துணி காயப்போடும் குடியிருப்பாளர்களுக்கு அபுதாபி முனிசிபாலிட்டி எச்சரிக்கை!
அபுதாபி: குடியிருப்புகளில் உள்ள பால்கனியில் நகரின் அழகியல் தோற்றத்தை சிதைக்கும் வகையில் துணிகளை காயப் போடும் குடியிருப்பாளர்களுக்கு அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நகரின் அழகியல் தோற்றம் பராமரிக்கப்படுவதையும், சுகாதாரமற்ற முறையில் சலவை செய்த துணிகளை உலர்த்துவதை நிறுத்துவதையும் உறுதி செய்யும் வகையில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை முனிசிபாலிட்டியால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி நகரின் அழகியல் தோற்றத்தை பராமரிப்பதன் முக்கியத்துவம் மற்றும் பொது இடங்களில் ஈரத் துணிகளை உலர்த்துவதற்கான முறையான விதிமுறைகளை குடியிருப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றனர்.
குடியிருப்பாளர்கள் தங்களின் ஈரத்துணிகளை காயப் போடுவதற்கு பால்கனியை பெரும்பாலும் பயன்படுத்துவதால் இது நகரின் அழகியல் தோற்றத்தை சிதைப்பதாக கூறப்படுகின்றது. இவ்வாறு துணிகளை தொங்கவிடுவதைத் தவிர்க்க, எலக்ட்ரானிக் துணி உலர்த்திகள் மற்றும் துணிகளை உலர்த்தும் ரேக்குகள் போன்ற சரியான மாற்று நவீன துணி உலர்த்தும் நுட்பங்களைக் கடைப்பிடிக்குமாறு மக்களை முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது.
அபுதாபியில் பால்கனிகளை இவ்வாறு தவறாக பயன்படுத்தினால் 1,000 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்று குடிமை அமைப்பு ஏற்கெனவே எச்சரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.