அபுதாபியில் ஒட்டுநர் இல்லா தானியங்கி மினி பேருந்தின் சேவை அடுத்த மாதம் முதல் துவக்கம்!
ஜிடெக்ஸ் (GITEX- Gulf Information Technology) என சொல்லக்கூடிய தொழிநுட்ப கண்காட்சியானது நேற்று (அக்டோபர் 10) தொடங்கி துபாயில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தொழில்நுட்பங்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி காண்போரை வியக்க வைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் ஒட்டுநர் இல்லா தானியங்கி மினிபஸ்ஸின் மாதிரியானது, கண்காட்சியில் உள்ள அபுதாபி அரசாங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இந்த புதிய ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்தானது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் (ITC) போக்குவரத்து அமைப்புகளின் திட்ட மேலாளர் சுல்தான் அல் மென்ஹாலி கூறுகையில், “இந்த திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு டிஜிட்டல் வரைப்படங்கள், தொழில்நுட்பங்கள், ரேடார், LiDER மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம். இந்த டாக்சிகள் ஓட்டுநர் இல்லாதவை, ஆனால் எங்களிடம் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருக்கிறார், அவர் எல்லா நேரங்களிலும் டாக்ஸியின் இயக்கத்தை நிர்வகிப்பார்." என கூறியுள்ளார்.
முற்றிலும் இலவசமான சேவைகளை வழங்கக்கூடிய இந்த பேருந்தில், ஏழு பேர் அமரலாம் என்றும், மேலும் நான்கு பேர் நின்று கொண்டு பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஹோட்டல், யாஸ் வாட்டர் வேர்ல்ட் யாஸ் மெரினா சர்க்யூட் மற்றும் ஃபெராரி வேர்ல்ட் உட்பட யாஸ் ஐலேண்டின் 9 இடங்களில் இந்த சேவை மேற்கோள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.