அமீரகத்தில் வேலையிழந்தவர்களுக்கு வேறு வேலை கிடைக்கும் வரை காப்பீடு மூலம் உதவித்தொகை!
அமீரகத்தில் வேலை இழப்புக்கு எதிராக காப்பீடு செய்யப்பட்டவர்கள், சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மற்றொரு வேலை கிடைக்கும் வரை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பணத் தொகையுடன் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.ஏ.இ.யில் வேலை இழந்த குடியிருப்பாளர்களுக்கு மாத உதவித்தொகை அளிக்கும் ஒரு திட்டத்தை அமீரக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அமீரகத்தின் மத்திய அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அரசு அறிவித்திருந்த இந்த வேலையின்மை காப்பீட்டுத் திட்டம் தற்பொழுது அமலுக்கு வந்துள்ளது. இந்த இழப்பீடானது மாதந்தோறும் வழங்கப்படும் என்றும், தொழிலாளரின் சம்பளத்தில் 60 சதவிகிதம் கணக்கிடப்பட்டு, வேலையின்மை நாளிலிருந்து மூன்று மாதங்களுக்கு மிகாமல் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 20.000 திர்ஹம்கள் வரை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் அறிக்கைபடி, இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு, ஊழியர் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்குக் குறையாமல் காப்பீடு செய்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், இது காப்பீட்டு அமைப்பில் சந்தா செலுத்திய தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
கூடுதலாக, வேலையில் ஒழுங்கீனம் காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த இழப்பீடு தொகையை பெற முடியாது என்றும், இழப்பீடு தொகையைப் பெற மோசடி அல்லது ஏமாற்றுதல் மூலம் செய்யப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர் வேறொரு வேலையில் சேர்ந்தவுடன் இழப்பீடு கொடுப்பது முடிவடையும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமீரக அரசின் இந்த திட்டத்தினால் வேலையை இழந்து வாடும் குடியிருப்பாளர்கள் பெரிதும் பயன்பெற முடியும். வேலை இழந்தவர்கள் தங்களை பணரீதியிலான பிரச்சனையில் இருந்து விடுபட இது உதவும் என்று கூறப்படுகிறது.