இந்தோனேசியாவில் அபுதாபி ஷேக் சயீத் மஸ்ஜிதின் மாதிரி மஸ்ஜிதை திறந்து வைத்த அமீரக அதிபர்!
உலகின் எட்டாவது பெரிய மஸ்ஜிதான அபுதாபி ஷேக் சயீத் மஸ்ஜித் மாதிரியில் இந்தோனேசியாவில் கட்டப்பட்ட மஸ்ஜிதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திறந்து வைத்தார்.
இந்தோனேசியாவின் சோலோ நகரில் நடந்த திறப்பு விழாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடன் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவும் கலந்து கொண்டார்.
ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திறப்பு விழா மற்றும் மசூதியின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். ஒரே மாதிரியான வழிபாட்டுத்தலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை பிரதிபலிக்கிறது என்று அவர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார்.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மஸ்ஜித் உலகின் எட்டாவது பெரிய மஸ்ஜிதாகும். இங்கு ஒரே நேரத்தில் 40000 பேர் பிரார்த்தனை செய்யலாம்.
நவீன ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிறுவனராகக் கருதப்படும் ஷேக் சயீத் நினைவாக இந்த மஸ்ஜித் கட்டப்பட்டது. அபுதாபியில் அமைந்துள்ள மஸ்ஜித் முகலாய மற்றும் மூரிஷ் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
(படங்கள்: Twitter/ @MohamedBinZayed)