‘மஸ்கட் நைட்ஸ்’ நாளை துவக்கம்! - பிப்.04 வரை பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நிறைந்த பண்டிகைக் கொண்டாட்டம்!
மஸ்கட்: ஓமன் தலைநகருக்கு பண்டிகை இரவைக் கொடுக்கும் மஸ்கட் நைட்ஸ் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும் விழாவில் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.
இந்த ஆண்டு குர்ரம் நேச்சுரல் பார்க், அல் நசீம் பார்க், ஓமன் ஆட்டோமொபைல் அசோசியேஷன் மைதானம், ஓமன் கன்வென்ஷன் மற்றும் கண்காட்சி மையம் என நான்கு இடங்களில் திருவிழா நடைபெறவுள்ளது.ஒவ்வொரு இடத்திலும் மக்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு அனுமதிக்கப்படும். உணவு அரங்கம், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சாகச நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்றவை கண்காட்சியில் சேர்க்கப்படும்.
கோவிட் தொற்றுநோய்க்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இது முதல் திருவிழா என்பதால், இந்த முறை அதிக மக்கள் வரக்கூடும் என்று ஏற்பாட்டாளர்கள் மதிப்பிடுகின்றனர்.