துபாயில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்று கவனம் பெற்ற ஆளில்லா ஸ்மார்ட் காவல் நிலையங்கள்...!
துபாயில் உள்ள மனித தலையீடுகள் இல்லாத உலகின் முதல் 24/7 ஸ்மார்ட் காவல் நிலையங்கள் (SPS) சுமார் 2,067,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது. 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை கடந்த 5 ஆண்டுகளில் 363,189 கோரிக்கைகளை சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.
துபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள 22 ஸ்மார்ட் காவல் நிலையங்கள் (SPS), குற்றங்கள் மற்றும் போக்குவரத்து சம்பவங்களைப் புகாரளிப்பது போன்ற 27 அத்தியாவசிய சேவைகளை 24x7 வழங்குகிறது. மேலும் 33 சமூக அடிப்படையிலான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அரபு, ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மற்றும் சீனம் ஆகிய ஏழு மொழிகளில் வழங்குகிறது.
இதுகுறித்து ஸ்மார்ட் காவல் நிலையங்களுக்கான அரசு மற்றும் தனியார் துறைக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் அலி அகமது கானிம், “24/7 மற்றும் மனித தலையீடு இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் சேவைகளை வழங்க டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஸ்மார்ட் போலீஸ் சேவைகளைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். SPS திட்டத்தின் வெற்றியானது, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் வழிகாட்டுதலின் கீழ், சமூக உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது. துபாய் குடியிருப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த ஸ்மார்ட் காவல் நிலையங்கள் மூலம் 24 மணி நேரமும் மனித தலையீடு இல்லாமல் ஸ்மார்ட் போலீஸ் சேவைகளை எளிதாகப் பெற முடியும், இது உயர்தர சேவைகளை எளிதாகவும் மிக உயர்ந்த தரத்துடன் வழங்குகிறது.” என்று கூறினார்.
துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 ன் போது, ஸ்மார்ட் காவல் நிலையம் (SPS) உலகத் தலைவர்கள், உலகெங்கிலும் இருந்து வந்த பார்வையாளர்களின் தனிக்கவனத்தை பெற்று பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.