ஓமனில் இனி பாஸ்போர்டில் ரெசிடென்ஸி விசா ரினிவல் ஸ்டாம்ப் கிடையாது...! புதிய விதி அமல்

ஓமனில் இனி பாஸ்போர்டில் ரெசிடென்ஸி விசா ரினிவல் ஸ்டாம்ப் கிடையாது...! புதிய விதி அமல்

ஜிசிசி நாடுகளின் ஒன்றான ஓமனில் குடியிருப்பு விசா விதியின் புதிய திருத்தத்தின்படி, விசா புதுப்பிக்கப்படும் வெளிநாட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் விசா முத்திரையைப் பெறத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியிருப்பு விசா விதியின் திருத்தத்தின்படி, அனைத்து விசா விபரங்களையும் அறிய குடியுரிமை அட்டை (residence card) மட்டுமே போதுமானது என ராயல் ஓமன் போலீஸ் (ROP) வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அந்த அறிவிப்பில், வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட்டில் முன்னர் விசா புதுப்பித்தலின் போது ஸ்டாம்ப் செய்யப்பட்டது. ஆனால், அது தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரெசிடென்ஸி விபரங்களை அறிய குடியிருப்பு அட்டை போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடியிருப்பாளர்கள் ரெசிடென்ஸி விசாவினை புதுப்பிக்க வழக்கமான முறையில் அல்லாமல் ஆன்லைனில் புதுப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்கள் குறித்து வெளிப்படுத்திய நிலையில்தான் காவல்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

இதுபற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரெசிடென்ஸ் விசா புதுப்பித்தலின் போது பாஸ்போர்ட்டில் முத்திரையிடும் முறை நிறுத்தப்பட்டுள்ளது . ரெசிடென்ஸ் கார்டே குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் விசா நிலையை தெரிந்துகொள்ள போதுமானது. இதன்படி ஒரு நபரின் பாஸ்போர்ட்டில் விசா ஸ்டாம்ப் இருந்தாலும் இல்லையென்றாலும் விசா பற்றிய தகவல்களுக்கு ரெசிடென்ஸ் கார்டினை ஆதாரமாக வைத்து அவர் பயணம் செய்து கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.