ஷார்ஜா அல்-மம்சார் பீச்சில் மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு!
ஷார்ஜா: ஷார்ஜா கடற்கரையில் பலத்த அலையில் சிக்கிய மனைவியைக் காப்பாற்ற முயன்ற வெளிநாட்டவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மனைவி காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு மூலம் மீட்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மாலை அல் மம்சார் கடற்கரையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர் மீட்பு குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகவில்லை. விபத்தை நேரில் பார்த்த அரேபிய பிரஜை ஒருவர் போலீஸூக்கு தகவல் தெரிவித்தார். ஆசிய ஜோடி கடலில் காணாமல் போனதை அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. அதிகாரிகள் மனைவியை பத்திரமாக மீட்டனர்; ஆனால் கணவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தீவிர தேடுதலுக்கு பின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலுதவி மற்றும் அவசர மருத்துவ உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அந்த இளைஞன் கடலில் கண்டெடுக்கப்படுவதற்குள் ஏற்கனவே இறந்துவிட்டான்.
அந்த இளைஞன் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஷார்ஜா போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மோசமான வானிலையின் போது கடலில் நீராட வேண்டாம் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நீச்சல் அனுமதிக்கப்படுகிறது. வலுவான அலைகள் உள்ள இடங்களைத் தவிர்க்கவும், இது தொடர்பாக, சிறப்பு எச்சரிக்கை பலகைகளில் உள்ள வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டும். மேலும், இரவு நேரம் உட்பட தடை செய்யப்பட்ட நேரங்களில் நீந்த வேண்டாம் எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மீட்புப் குழுவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.