8 மாதங்களாக காணாமல் போன இந்திய தொழிலாளி பாலைவனத்தில் சடலமாக மீட்பு!
புரைதா:தனது வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையில் சவுதிக்கு வேலைக்கு வந்தார் இந்தியரான தெலுங்கானாவை சேர்ந்த மென்னல்லா ராமுலு. சொந்த வீடு கட்ட வேண்டும், கடனை அடைக்க வேண்டும், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு சிறந்ததை வழங்க வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. ஆனாலும் அவனது கனவுகள் எதுவும் நிறைவேறாமல் பாலைவனத்தில் அவருடன் மரணித்துப் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமுலு சில காரணங்களுக்காக தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளியாகிவிட்டார். சிறிது காலத்தில் மென்னல்லா குடும்பத்துடனான தொடர்பை இழந்தார். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவருடைய முதலாளியோ அல்லது நண்பர்களுக்கோ தெரியவில்லை. 8 மாதங்களாக அங்கும் இங்கும் தேடியும் எங்கும் அவரைக் காணவில்லை.
இந்நிலையில், ஒரு ஆப்பிரிக்க மேய்ப்பர் பாலைவனத்தில் காணாமல் போன தனது விலங்குகளைத் தேடிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு சடலம் கிடப்பதைக் கண்டார். உடனே அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த போலீஸார் சடலம் ஒன்று எலும்புக் கூடாக மாறியிருந்ததாகவும், ஆனால் அது அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விசாரணையில் அந்த சடலம் ராமுலு என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்த தடயவியல் சோதனையில் தாகம் மற்றும் வெப்ப சோர்வு காரணமாக மரணம் ஏற்பட்டதாக அறிக்கைகள் வெளியாயின. அவர் இறந்து 8 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது மிகவும் வருத்தமான செய்தியாகும்.
மண்ணேல ராமுலுவின் சிதைந்த உடல், அவர் இறந்து கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 1, 2016 அன்று பாலைவனத்தில் காணப்பட்டது. அப்போதிருந்து, உடல் உள்ளூர் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்புவதற்காகக் காத்திருந்தது. நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் குடும்பத்தின் மோசமான நிதி நிலை உள்ளிட்ட பல காரணங்களால், நாடு திரும்புதல் நடைபெறவில்லை, ராமுலு இறுதியாக சவுதியில் அடக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக ராமுலுவின் மரணம் குறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டது மற்றும் தூதரகம் அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு தகவலை அனுப்பியது.
காசிமில் உள்ள சமூக சேவகர் நௌஷாத், புரைதாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளிடமும், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடமும் இந்த விஷயத்தைப் பகிர்ந்து அதனை தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தார்.
ராமுலுவின் மனைவி கவிதா, இந்திய தூதரகத்திற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் மார்ச் 2016 மற்றும் மீண்டும் டிசம்பரில் அனுப்பியுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு, உடலைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையை குடும்பத்தினர் கைவிட்டனர்.
ஆதாரம்: சவுதி கெஜட்