இந்தியாவிற்கு செல்லும் சர்வதேச விமானப் பயணிகள் இனி ஏர் சுவிதா படிவங்களை நிரப்பத் தேவையில்லை!
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகள், ஏர் சுவிதா படிவங்கள் என்று பிரபலமாக அறியப்படும் கோவிட்-19 தடுப்பூசிக்கான சுய அறிவிப்புப் படிவங்களை இனி நிரப்ப வேண்டியதில்லை.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளும் ஏர் சுவிதா போர்ட்டலில் படிவங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத் தேவை இனி இல்லை. இந்த முடிவு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பில், "தொடர்ந்து குறைந்து வரும் கோவிட்-19 மற்றும் உலகளாவிய மற்றும் இந்தியாவிலும் கோவிட்-19 தடுப்பூசி போடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சர்வதேச வருகைக்கான வழிகாட்டுதல்களில் திருத்தம் செய்துள்ளது." என கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், ஆன்லைன் ஏர் சுவிதா போர்ட்டலில் சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கோவிட் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் விதியை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அது கூறியுள்ளது.