2.7 மில்லியன் திர்ஹம் திருட்டு முயற்சியை முறியடித்த இந்தியருக்கு துபாய் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் பாராட்டு!
துபாயில் 2,757,158 (2.7 மில்லியன் திர்ஹம்) கொண்ட ஒரு நபரின் கைப்பையை கொள்ளையடிக்கும் ஒரு குற்றவாளியின் முயற்சியை முறியடித்த துணிச்சலான செயலுக்காக, துபாய் காவல்துறையின் மூத்த அதிகாரிகளின் தூதுக்குழு, இந்திய நாட்டவரான கேஷூர் காரா சாவாடாகாரு கெலாவை அவரது பணியிடத்திற்கு சென்று நேரில் பாராட்டி ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
நயிஃப் பகுதியில் இரண்டு ஆசிய நாட்டை சேர்ந்த ஆண்கள் வெவ்வேறு கரன்சிகளின் ரொக்கமாக 4,250,000 திர்ஹம்ஸ் கொண்ட இரண்டு பைகளை எடுத்துச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. பிரதான சந்தேகநபரும் அவரது கூட்டாளிகளும் ஆசிய நாட்டவர்களை இடைமறித்து 2,757,158 திர்ஹம் அடங்கிய இரண்டு பைகளில் ஒன்றைப் பறித்துச் சென்றனர்.
அவர்கள் உதவிக்காக கூச்சலிட்டபோது, கேஷூர் திருடப்பட்ட பையுடன் தன்னை நோக்கி ஓடுவதைக் கண்டார். உடனடியாக அவர் தைரியமாக குற்றவாளி நபரை தடுத்து அவருடன் மல்யுத்தம் செய்யத் தொடங்கினார். மேலும் போலீஸ் ரோந்து வாகனம் வந்து குற்றவாளியை கைது செய்ய வரும் வரை அவர் தரையில் படுத்தவாறு விடாமல் பிடித்துத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் கலீல் இப்ராஹிம் அல் மன்சூரி தலைமையில், குற்றப் புலனாய்வு விவகாரங்களுக்கான உதவித் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் டாக்டர் ஆதில் அல் சுவைதி, துபாய் காவல் நிலைய இயக்குநர்கள் குழுவின் இயக்குநர் டாக்டர் மேஜர் ஜெனரல் தாரிக் தஹ்லாக், நயிஃப் மற்றும் பர் துபாய் காவல் நிலைய இயக்குநர்கள் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கேஷூர் காரா சாவாடாகாரு கெலாவை பாராட்டினர்.
திருடனை இடைமறித்து அவனது முயற்சியை முறியடித்த அவரின் முயற்சிகளையும் துணிச்சலையும் அவர்கள் பாராட்டினார். அவரது நடத்தை சமூகத்தின் மீதான அவரது உண்மையான அர்ப்பணிப்பையும் அவசரநிலைகளைக் கையாள்வதில் அவரது புத்திசாலித்தனத்தையும் பிரதிபலிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
மேஜர் ஜெனரல் அல் மன்ஷூரி, கேஷூரை அவரது பணியிடத்திலும், சக ஊழியர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடையேயும் கெளரவிப்பது என்பது, சமூக கூட்டாண்மை என்ற கருத்தை வலுப்படுத்துவதிலும், தனிநபர்களிடையே பொறுப்புணர்வு உணர்வை வலுப்படுத்துவதிலும் துபாய் காவல்துறையின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்று விளக்கினார்.