மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு!
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு மூன்று லட்சம் திர்ஹாம் இழப்பீடு வழங்க அபுதாபி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவத்தில் மருத்துவர்களின் அலட்சியப்போக்கு கண்டறியப்பட்டதால், இந்தத் தொகையை குழந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த இரு மருத்துவர்களும் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதால் குழந்தைக்கு உயிரிழப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருத்துவமனையின் பொறுப்பின்மையால் வயதான காலத்தில் மகனிடமிருந்து பெற வேண்டிய உதவிகள் இல்லாமல் போய்விட்டதாக பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். மகனை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பிற இழப்புகளுக்காக ஒன்றரை கோடி திர்ஹம் இழப்பீடு கோரி பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவக் குழுவை நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவின் அறிக்கையில், குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் தோல்வி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அல் ஐன் முதன்மை நீதிமன்றம், குழந்தையின் பெற்றோருக்கு 90,000 திர்ஹம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றம் வழக்கை விசாரித்து, இழப்பீட்டுத் தொகையை இரண்டு லட்சம் திர்ஹமாக உயர்த்தியது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து வாதியும், பிரதிவாதியும் அபுதாபி மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகினர்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த அபுதாபி உச்ச நீதிமன்ற நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் திர்ஹமாக உயர்த்தி தீர்ப்பு வழங்கினார்.