‘டவ்’ ஷாம்பூவில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்! - அமீரக வாழ் மக்கள் கவலைப்பட வேண்டாம்!
துபாய்: புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பதாக சந்தேகம் எழுந்ததால், முன்னணி பிராண்டுகளின் ஷாம்பு தயாரிப்புகளை திரும்பப் பெற்ற சம்பவம் குறித்து துபாய் நகராட்சி விளக்கம் அளித்துள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் பென்சீன் அதிகளவில் உள்ளது தொடர்பாக ‘டவ் - Dove' உட்பட பிரபலமான ஏரோசல் உலர் ஷாம்புகளை யூனிலீவர் திரும்பப் பெற்றுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அவற்றின் பயன்பாட்டிற்கு எதிராக எச்சரித்துள்ளது. ஆனால் இந்த தயாரிப்புகள் துபாயில் உள்ள உள்ளூர் சந்தையில் விற்பனைக்கு இல்லை என்று துபாய் நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை தெளிவுபடுத்தினர். இவை எமிரேட்ஸில் விற்கப்படுவதில்லை என்றும், துபாயில் வசிப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். பொருட்கள் குறித்த வதந்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்க சந்தையில் விற்கப்படும் தயாரிப்புகள் UAE சந்தையில் விற்கப்படும் பொருட்களிலிருந்து வேறுபட்டவை என்றும், ஒவ்வொரு பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து தயாரிப்புகள் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளன என்றும் நகராட்சி மீண்டும் தெளிவுப்படுத்தியது.
உள்ளூர் சந்தையில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சரியான சுகாதார மற்றும் பாதுகாப்பு தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக ஒரு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளது. இதுதவிர, துபாயில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில், தயாரிப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டால் துபாய் நகராட்சியைத் தொடர்பு கொள்ள வேண்டும். 800900 என்ற எண் மூலமாகவோ அல்லது துபாய் முனிசிபாலிட்டி ஸ்மார்ட் ஆப் மூலமாகவோ மக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம்.
இதற்கிடையில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நெக்ஸ், ட்ரெஸ்மி மற்றும் டிகி போன்ற சில பிரபலமான ஏரோசல் உலர் ஷாம்பூக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தயாரிப்புகளில் காணப்படும் பென்சீனின் அளவை நிறுவனம் வெளியிடவில்லை, இருப்பினும் நிறுவனம் இந்த விஷயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளுகிறது. பென்சீன் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதால் லுகேமியா ஏற்படலாம்.