ஜெத்தா: ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் வங்கியில் இருந்த மொத்த பணத்தையும் இழந்த இந்தியர்!

ஜெத்தா: ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் வங்கியில் இருந்த மொத்த பணத்தையும் இழந்த இந்தியர்!

ரியாத்: ஜெத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கி தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதையும் இழந்துள்ளார். மூத்த பொறியாளரான அவர், ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் மோசடி நபர்களால் இந்நிலைக்கு ஆளானார்.

முன்னதாக அவருக்கு தவகல்னா விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கும் பெயரில் தொலைபேசி அழைப்பு வந்தது.  விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை அமைச்சகம் மறுஆய்வு செய்து வருவதாகவும், இதற்காக சில தகவல்களைக் கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அவருக்கு வந்த ஒடிபி எண் சரிபார்ப்புக்காக கோரப்பட்டுள்ளது. மறுநாள் இதேபோன்ற தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. ஆனால் எந்த பதிலும் அந்த அழைப்பில் இல்லை. அன்று மாலை அவரின் மொபைல் போன் வேலை செய்வதை நிறுத்தியது.  என்ன நடந்தது என்பதை அறிய அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, ​​மொபைல் இணைப்பு வேறு டெலிகாம் ஆபரேட்டருக்கு மாறியதாக பதில் வந்தது.  வாடிக்கையாளரின் போனில் வரும் ஓடிபியை சொல்லி, மோசடி செய்பவர்கள் அதை பயன்படுத்தி வேறு நிறுவனத்திற்கு இணைப்பை மாற்றி புதிய சிம் பெற்றுள்ளார்கள்.

அதன் பின்னர் அவரின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் புதிய சிம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.  மோசடியைப் புரிந்துகொண்ட அவர் உடனடியாக வங்கியை அணுகினார், ஆனால் அதற்கு முன்பே கணக்கில் இருந்த பணம் அனைத்தும் எடுக்கப்பட்டு விட்டது.  இதுதொடர்பாக அவர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 

உத்தியோகபூர்வ மையங்களில் இருந்து போலியான மோசடிகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை நம்பி தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என பூர்வீகவாசிகள் மற்றும் வெளிநாட்டவர்களை அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறார்கள். எனினும் எச்சரிக்கையை மீறி இதுபோன்ற மோசடிகளில் பலரும் சிக்கிவருகின்றனர். இதுபோன்ற பல மோசடி கும்பல்களை போலீசார் பிடித்துள்ளனர்.