உலகில் 7 குழந்தைகளில் ஒருவருக்கு மனநல பாதிப்பு...!

உலகில் 7 குழந்தைகளில் ஒருவருக்கு மனநல பாதிப்பு...!

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் 7 பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு குழந்தைகளைக் கடந்து வளரிளம் பருவத்தில் உள்ள 14-17 சிறார்களிடமும் அதிகம் காணப்படுகிறது என்றும் WHO தெரிவித்துள்ளது.

ஆனால் இது குறித்து நாம் யாரும் அக்கறை கொள்வதில்லை என்றும் இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்ற தெரிந்தாலும் நாம் அதற்கான சிகிச்சை வழங்குவதில்லை எனவும் WHO கூறுகிறது. இந்த பிரச்னைகள் அவர்களை மட்டும் பாதிப்பது கிடையாது. அவர்களை சுற்றியிருக்கும் என்னையும் உங்களையும் கூட பாதிக்கும். இது பிஞ்சு குழந்தைகளையும் சிறார்களையும் தற்கொலை நோக்கியும், தீராத நோய்களை நோக்கியும், இயலாமையை நோக்கியும் மெல்ல நகர்த்திக் கொண்டிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

குழந்தைகளுக்கு மனநலம் மற்றும் உளவியல் ஆதரவு தேவைப்படுகிறது எனில் நாம் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும். நேர்மறையாக பேசுவது, அதுபோல நடந்துகொள்வதன் மூலம் குழந்தைகளும் விரைவில் இம்முறையை பழகிக்கொள்ளும். இது அவர்களின் மன வலிமையை ஏற்படுத்தும். பள்ளிகளிலும், குழந்தைகள்/சிறார்கள் பழகும் கூட்டத்தினரும் பாதுகாப்பானவர்கள்தான் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேபோல பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் இருக்கிறார்கள் எனில் அதனை வெளிப்படையாக அவர்கள் கூறுவதை நாம் வரவேற்க வேண்டும். இது உரையாடல்கள் மூலமாகதான் சாத்தியமாகும். ஆகவே உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள், அவர்களுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை விதையுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நம்பிக்கையான, நேர்மறையான எதிர்காலத்தை குழந்தைகளுக்கு உருவாக்க முடியும்.