துபாயில் துவங்கியது குளோபல் வில்லேஜின் 27வது சீசன்!

துபாயில் துவங்கியது குளோபல் வில்லேஜின் 27வது சீசன்!

துபாய்: கேளிக்கை மற்றும் வணிகத்திற்கான உலக நாடுகளின் சங்கமமான துபாய் குளோபல் வில்லேஜின் 27வது சீசன் தொடங்கியுள்ளது. புதிய ஈர்ப்புகள் மற்றும் பொழுதுபோக்குகளுடன் ரசிகர்களுக்கு குளோபல் வில்லேஜ் அதன் கதவுகளைத் திறக்கிறது. 

புதிய சீசன் ஏப்ரல் 2023 வரை இருக்கும். ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை குளோபல் வில்லேஜூக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அதிகாலை 1 மணி வரை திறந்திருக்கும்.

3,500 க்கும் மேற்பட்ட ஷாப்பிங் கடைகள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் தெரு உணவு கடைகள் இங்கு திறக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நான்கு வழித்தடங்களில் பேருந்து சேவைகளை RTA மீண்டும் தொடங்கியுள்ளது. 

ரஷிதியா பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து எண். 102, குபைபா நிலையத்திலிருந்து பேருந்து எண். 104 மற்றும் மால் ஆஃப் எமிரேட்ஸ் நிலையத்திலிருந்து பேருந்து எண். 106 ஆகியவை குளோபல் வில்லேஜிற்கு செல்லும் பேருந்து சேவைகளாகும். இந்தப் பேருந்துகள் ஒவ்வொரு மணி நேரமும் இயக்கப்படும்.

யூனியன் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து எண் 103 ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளை குளோபல் வில்லேஜிற்கு அழைத்துச் செல்லும் என்று RTA தெரிவித்துள்ளது. 

காரில் வருபவர்கள் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் (E-311) எக்ஸிட் 37 வழியாக குளோபல் வில்லேஜுக்குள் நுழையலாம்.

நுழைவுச்சீட்டின் விலை:

பார்வையாளர்கள் ஆன்லைனிலும் கவுண்டர்களிலும் டிக்கெட் வாங்கலாம். ஆன்லைனில் வாங்கும்போது டிக்கெட்டுகள் 10% மலிவானவை. ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் புதிய டிக்கெட் (பொது விடுமுறை நாட்கள் தவிர) இந்த சீசனில் சேர்க்கப்பட்டுள்ளது. ஞாயிறு முதல் வியாழன் வரை நுழைய அனுமதிக்கும் டிக்கெட்டின் விலை 20 திர்ஹம்கள் (மதிப்பு டிக்கெட்) மற்றும் எந்த நாளிலும் (எந்த நாள் டிக்கெட்) நுழைய அனுமதிக்கும் டிக்கெட்டுக்கு 25 திர்ஹம்கள். குளோபல் வில்லேஜ் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் டிக்கெட் வாங்குபவர்களுக்கு இரண்டு டிக்கெட்டுகளிலும் 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.