கத்தாரில் கின்னஸ் சாதனை நிகழ்த்திய உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் பஸ் டிப்போ!
தோஹா: உலகளவில் மிகப்பெரிய அளவில் எலக்ட்ரிக் பஸ் டிப்போவை (Electric Bus Depot) திறந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது கத்தாரின் லுசைல் எலக்ட்ரிக் பஸ் டிப்போ. இதன்மூலம் 478 பேருந்துகள் செல்லக்கூடிய உலகளவில் மிகப்பெரிய எலக்ட்ரிக் பஸ் டிப்போ கத்தாரில் உள்ள லுசைல் பேருந்து நிலையம் கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே முழுவதும் சூரிய சக்தியை பயன்படுத்தி 11,000 PV சோலார் பேனல்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ள முதல் டிப்போ இதுவாகும். அதன் கட்டிடங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க ஒரு நாளைக்கு 4 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த டிப்போவில் 478 பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் தங்குமிடம் உட்பட 24 கட்டிடங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியாளர்கள் தங்குமிடத்தில் 1,400 பேர் தங்கக்கூடிய அளவிற்கு இடவசதிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.