அமீரகம்: நிறுவனங்களில் 2% எமராத்திகளை நியமிக்கும் புதிய விதி! - மீறினால் அபராதம்!

அமீரகம்: நிறுவனங்களில் 2% எமராத்திகளை நியமிக்கும் புதிய விதி! - மீறினால் அபராதம்!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிட்ட அளவிலான எண்ணிக்கை கொண்ட நிறுவனங்கள் 2 சதவீத எண்ணிக்கையில் தனது ஊழியர்களில் அமீரக குடிமக்களை பணியமர்த்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் துறை நிறுவனங்களுக்கு அபராதங்களைத் தவிர்ப்பதற்காக திறமையான வேலைகளுக்கு இரண்டு சதவீத (Emiratisation) எமராத்திகள் மயம் என்கிற விகிதத்தை விரைவாக அடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும், தனியார் துறை நிறுவனங்களில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் இரண்டு சதவீத எமராத்திகள் மயத்தை எட்டுமாறும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் திறமையான வேலைகளில் பணிபுரியும் ஒவ்வொரு 50 வெளிநாட்டவர்களுக்கும், ஒரு ஐக்கிய அரபு அமீரக குடிமகன் பணியமர்த்தப்படுவார் என இந்த ஆண்டுக்கான 2% எமிரேடிசேஷன் விகிதம் கணக்கிடப்படுகிறது. இந்த முடிவு 2026 ஆம் ஆண்டிற்குள் எமிரேடிசேஷன் விகிதத்தில் 10 சதவிகிதத்தை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களானது அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இந்த அபராதம் ஜனவரி 2023 முதல் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஒரு சமூக ஊடக பதிவில், ஜனவரி 2023 முதல் இந்த விதிமுறைக்கு இணங்காத நிறுவனத்திடம் இருந்து பணிக்கு அமர்த்தப்பட வேண்டிய எமராத்திகளின்  எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு எமிராட்டி எண்ணிக்கைக்கும் 72,000 திர்ஹம்ஸ் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எமிரேடிசேஷன் இலக்கை அடையும் தனியார் துறை நிறுவனங்கள், First Category Classification-ல் மற்றும் Tawteen Partners Club-ல் மெம்பர்ஷிப் பெறலாம் என அமைச்சகம் கூறியுள்ளது. அத்துடன் இதன் மூலம் இந்த நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் சேவைக் கட்டணத்தில் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையான எமிரேடிசேஷன் விகிதத்தை பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு மாதாந்திர நிதி அபராதமாக 6,000 திர்ஹம்ஸ் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அபராதமானது ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.