பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஏஇ அமைச்சகம்!

பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஏஇ அமைச்சகம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் அமைச்சகமானது, பணியிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முதலாளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அமைச்சகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பாதுகாப்பான பணிச்சூழலுக்காக சில நிபந்தனைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

  • இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் கழிவுகள் போன்றவற்றை சேமிப்பதற்கான தற்காலிக சேமிப்பு இடங்களாக பணியிடங்களை பயன்படுத்தக்கூடாது. இவை அனைத்திற்கும் தனித்தனி இடங்கள் அமைக்க வேண்டும்.
  • தொழிலாளர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், விசாலமான மற்றும் வசதியான சூழலில் வேலை செய்வதற்குமான சூழலை அனுமதிக்க வேண்டும்.
  • ஏறும் போது அல்லது உயரத்தில் வேலை செய்யும் போது கீழே விழுவதிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • பணியிடங்களுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பாக மூடப்பட வேண்டும் அல்லது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
  • பணியிடங்கள் மற்றும் வேலை உபகரணங்கள் தீ தடுப்புடன் இருக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை அந்நிறுவனம் தயார் செய்ய வேண்டும்.
  • அனைத்து வளாக வசதிகள், நுழைவாயில்கள், வெளியேறும் இடங்கள் மற்றும் அவசரகால வெளியேறும் இடங்கள் அடையாளம் குறிக்கப்பட்டு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தனித்தனியாக குறிக்கப்பட வேண்டும்.
  • பணியிடங்களின் தளமானது, துளைகள், பெரிய குழிகள் அல்லது பிற தடைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.