இதயமாற்று அறுவை சிகிச்சை! - அபுதாபியிலிருந்து ரியாத்துக்கு பறந்த இதயம்!

இதயமாற்று அறுவை சிகிச்சை! - அபுதாபியிலிருந்து ரியாத்துக்கு பறந்த இதயம்!

ரியாத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த நோயாளியின் இதயம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் கிங் பைசல் சிறப்பு மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கிங் பைசல் மருத்துவமனைக்கு மூளைச் சாவு அடைந்த நோயாளியின் இதயம் கொண்டு வரப்பட்டு இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாகும்.  இதேபோன்ற அறுவை சிகிச்சை இந்த மாத தொடக்கத்தில் செய்யப்பட்டது. 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சவுதி மையம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய உறுப்பு மாற்று திட்டம் மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இதயம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ரியாத்துக்கு குறிப்பிட்ட சாதனை நேரத்தில் கொண்டு வரப்பட்டது. இதற்காக, மூளைச்சாவு அடைந்த நோயாளியின் உறவினர்களிடம் அனுமதி பெற்று, சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டன.

வியாழன் காலை ரியாத்தில் உள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர். பைசல் அல் ஒமாரி தலைமையிலான மருத்துவக் குழு அபுதாபி கிளீவ்லேண்ட் மருத்துவமனைக்கு வந்து 38 வயது மூளைச் சாவு நோயாளியின் இதயத்தை அகற்றியது. காலை 11.30 மணியளவில் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இதயம் ரியாத்துக்கு கொண்டு வரப்பட்டது. 54 வயதான நோயாளிக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை ஐந்து மணி நேரம் நீடித்தது. மாலை 4.30 மணியளவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக மருத்துவக் குழுவினர் அறிவித்தனர்.