நீண்ட தூரத்திற்காக கின்னஸ் சாதனை படைத்த துபாய் அல்குத்ரா சைக்கிள் பாதை!
துபாய்: உலகின் மிக நீளமான சைக்கிள் பாதை என்ற தனது முந்தைய சாதனையை துபாயின் அல்குத்ரா சைக்கிள் பாதை மீண்டும் முறியடித்துள்ளது.
33 கிமீ சைக்கிள் பாதைக்காக 2020 இல் பதிவு செய்யப்பட்ட முந்தைய உலக சாதனையை, 80.6 கிமீ என தூரத்தை அதிகரித்து பழைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை பொறிக்கப்பட்ட பளிங்கு தகடு அல் குத்ராவில் RTA மூலம் அமைக்கப்பட்டது.
இந்த சைக்கிள் பாதையில் 135 கி.மீ நீள துணைப் பாதைகள் உள்ளன. வழித்தடத்தில் ஓய்வு பகுதிகள், உணவகங்கள் மற்றும் கழிவறைகள் போன்ற வசதிகள் உள்ளன. சொந்தமாக சைக்கிள் இல்லாதவர்கள் வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் வசதியும் உள்ளது. அவசர தேவைகளுக்கு அழைக்க 30 இடங்களில் அவசர தொலைபேசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் எண்ணப்படி, துபாயை மிதிவண்டிக்கு உகந்த நகரமாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த சாதனை என்று போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரி மெய்தா பின் அதாய் கூறினார்.