ரொனால்டோவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி - டிக்கெட் வருவாயை ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கும் சவுதி அரசு!
சவுதி அரேபியா சென்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கும் பணியில் ரியாத் நகரம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கிறிஸ்டியானோவை வரவேற்று ரியாத் முழுவதும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 25,000 கொள்ளளவு கொண்ட அரங்கத்திற்கு 15 ரியால் டிக்கெட் மூலம் அனுமதிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு அல் நாசர் கிளப்பின் சொந்த மைதானமான மர்சூல் எனப்படும் கிங் சவுத் பல்கலைக்கழக மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். டிக்கெட் வருமானம் முழுவதையும் ஏழை மக்களுக்கு சவூதி அரசு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரொனால்டோவின் அல் நாசர் எண் 7 ஜெர்சிக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. ஒரு ஜெர்சியின் விலை 414 ரியால்கள். தோராயமாக 9125 ரூபாய் சவுதி அரேபியாவில் 48 மணி நேரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஜெர்சிகள் விற்பனையாகியுள்ளது. ஜெர்சி விற்பனை மூலம் மட்டும் அல் நாசர் கிளப் இரண்டு நாட்களில் 82 கோடி ரியால்களை பெற்றுள்ளது.