3 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோல்டன் விசா வழங்கிய துபாய்!
துபாய்: துபாயில் 3 வருடத்தில் 1,51,600 கோல்டன் விசா வழங்கப்பட்டதாக பொது இயக்குனரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் துபாயில் மட்டும் 1.5 லட்சம் நீண்டகால கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த விசா நடைமுறை அமல்படுத்தப்பட்டது. முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், நல்ல திறமை படைத்த மாணவர்களுக்கு கோல்டன் விசா வழங்க முடிவெடுக்கப்பட்டது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் விசாவை புதுப்பித்தால் போதுமானது. கிட்டத்தட்ட அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கௌரவமாக நடத்தப்படுவார்கள்.
தங்கள் நாட்டு முதலீட்டாளர்களைக் கௌரவிக்கவும் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும் தொழிலறிவு படைத்த மக்களை ஊக்கப்படுத்தவும் இத்தகைய நடைமுறையை அமீரக அரசு மேற்கொண்டுள்ளது. தங்கள் நாட்டைவிட்டு அறிவும் திறமையும் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதே இந்த விசா வழங்கப்படுவதின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை. இனம், நாடு, மொழி எந்த வேறுபாடும் பார்க்கப்படாமல் திறமையாளர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.