அனுமதியின்றி டியூஷன் நடத்தும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் எச்சரிக்கை..!
குவைத் சிட்டி: குவைத்தில் சட்டவிரோதமாக டியூஷன் நடத்தும் வெளிநாட்டவர்கள் மீது கல்வி அமைச்சகம் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. உரிமம் இல்லாமல் கல்விக் கட்டணத்தை பெறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தனியார் கல்விக் கூடங்களுக்கு விளம்பரம் செய்த பல இதழ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பல முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் சட்டவிரோத தனியார் கல்விகளை முழுமையாக ஒழிக்க முடியாததால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற டியூஷன் சென்டர்களின் விளம்பரங்களை வெளியிடும் இதழ்களின் அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வி அமைச்சகத்தின் பொதுக் கல்வி மற்றும் சட்ட விவகாரங்கள் துறை இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.