2022ன் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் - அமீரகம் முதலிடம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட்டானது 2022 ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டின்படி ஆர்டன் கேபிட்டல் எனும் தளமானது இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டின் பாஸ்போர்ட்டுகளின் மொபிலிட்டி ஸ்கோரின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகளை வரிசைப்படுத்தப்படுகிறது என்று ஆர்டன் கேபிட்டல் கூறியுள்ளது. அதாவது விசா இல்லாமல் பயணிக்கும் அல்லது வருகையின் போது விசாவைப் (Visa / on arrival) பெறுவதற்கான தகுதியின் அடிப்படையில் தர வரிசைப்படுத்தப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 121 நாடுகளுக்கு விசா இல்லாமலும் 59 யார்டுகளுக்கு ஆன் அரைவல் விசா மூலமாகவும் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் இந்த ஆண்டின் உலகின் சிறந்த பாஸ்போர்ட்டாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்தபடியாக 10 ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் கொரியா ஆகியவை 173 மதிப்பெண்களுடன் இரண்டாவதாக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் மொபிலிட்டி ஸ்கோர் 38 உடன் கடைசி இடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலில் கத்தார் 45வது இடத்திலும், குவைத் 47வது இடத்திலும் உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடான சவுதி அரேபியா 54வது இடத்திலும், இந்தியா 69வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.