ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு! - முழு விவரம்
'SPREAD THE WORD' 'வார்த்தைகள் பரவட்டும்' என்ற தொனிப்பொருளில் ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் 41வது சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்ட கண்காட்சி, இந்த முறை அதனை மாற்றி எழுதும் என ஷார்ஜா புக் அத்தாரிட்டி (SBA) அமைப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைந்துள்ள ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி, பத்து நாட்களில் 2.4 மில்லியன் வாசகர்களை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய பொது புத்தகக் கண்காட்சியாகும். முகவர்கள், வெளியீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், பதிப்பக நிறுவனங்கள் மற்றும் பலர் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பதிப்பக வல்லுநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா உட்பட 95 நாடுகளைச் சேர்ந்த 2,213 வெளியீட்டாளர்கள் கண்காட்சியின் 18,000 சதுர மீட்டர் இடத்தை 1.5 லட்சம் தலைப்புகளுடன் வரிசைப்படுத்தினர்.
2022 புக்கர் பரிசு வென்ற இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, இந்திய-அமெரிக்க எழுத்தாளர் தீபக் சோப்ரா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்திய-கனடிய கவிஞர் ரூபி கவுர், கார்ட்டூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர் இன் பியர்ஸ், பிரிட்டிஷ் எழுத்தாளர் பிகோ ஐயர், அமெரிக்க எழுத்தாளர் டி.ஜே. பால்மர், ஆஸ்திரேலிய பேஷன் இல்லஸ்ட்ரேட்டர் மேகன் ஹெஸ் , செஃப் விக்கி ரத்னானி, செஃப் அர்ச்சனா தோஷி, எழுத்தாளர் ரவி சுப்ரமணியன், மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்து கோபன், சுனில்.பி.இளையதம், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பலர் கண்காட்சிக்கு வந்திருந்தனர்.
அரபு நாடுகளில் இருந்து 1,298 வெளியீட்டாளர்களும், சர்வதேச அளவில் 915 பேரும் பங்கேற்றுள்ளனர்.
அமீரகம் 339 வெளியீட்டாளர்களுடன் முன்னணியில் உள்ளது. எகிப்து-306, லெபனான்-125, சிரியா-95 மற்றும் யு.கே-61 ஆகியவை பங்கேற்ற பிற வெளியீட்டாளர்கள் ஆவர்.
இந்திய பதிப்பகங்களின் ஸ்டால்கள் இயங்கும் ஹால் எண் 7ல் உள்ள எழுத்தாளர் மன்றத்தில் புதிய வெளியீடுகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு ஸ்டால்களின் முன் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் காலச்சுவடு, சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகங்கள் மூலம் தமிழ் புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
இம்முறை கியூபா, கோஸ்டாரிகா, லைபீரியா, பிலிப்பைன்ஸ், அயர்லாந்து, மால்டா, மாலி, ஜமைக்கா, ஐஸ்லாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளும் கண்காட்சியில் பங்கேற்றன.
57 நாடுகளைச் சேர்ந்த 129 சிறப்பு விருந்தினர்கள் இம்முறை கண்காட்சிக்கு வந்துள்ளனர். 1,047 நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. 15 நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் உட்பட 70 முக்கிய பிரமுகர்களால் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குழு விவாதங்கள், பட்டறைகள் மற்றும் நேரடி சமையல் நிகழ்ச்சிகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. மேலும், புத்தக வெளியீட்டு விழா, பேச்சு, கருத்தரங்கு, விவாதங்கள், கவிதை வாசிப்பு, குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.
வருகையாளர்களை பரவசப்படுத்தும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் அரங்கேறின.
View this post on Instagram
அனைத்திற்கும் மேலாக உலகின் சிறந்த புத்தகங்களை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை இக்கண்காட்சி வழங்குகிறது. வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் கையெழுத்துப் புத்தகங்களைப் பெறும் அரிய வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
புத்தக கண்காட்சியின் கடைசி நாள் என்பதாலும், வார இறுதி நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதுகிறது.
courtesy படங்கள் - sharjahbookauthority
தொடர்புடைய செய்திகள்:
ஷார்ஜா புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர் பங்கேற்பு!