ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய மாணவர் கலைவிழா!
ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்கம் ஆண்டு தோறும் ரியாத் பன்னாட்டுப் பள்ளிகளில் பயின்றுவரும் தமிழ் மாணவர்களில், படிப்பில் முதலாம் இடம் பெறும் மாணவ, மாணவியரையும், தமிழ் பாடத்தில் முதலாமிடம் பெறும் மாணவ மாணவியரையும் பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் கொடுத்து கவுரவிக்கின்றது. அதேபோல் பள்ளியில் விளையாட்டில் சாதனைகள் நிகழ்த்திய தமிழ் மாணவர்களையும், தனித்திறமைகளில் உச்சம் தொட்ட தமிழ் மாணவர்களையும் கவுரவிக்கின்றது.
கோவிட் காரணமாக இரண்டு வருடமாக தடைபட்ட இந்த நிகழ்வு, இவ்வருடம் இந்தியத் தூதரக அரங்கில் இந்தியத்தூதரக அதிகாரி திரு. பிபூட்டி நாத் பாண்டே அவர்கள் முன்னிலையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
அத்துடன் இந்தியப் பன்னாட்டுப் பள்ளிகளின் மாணவர்கள் பங்குபெறும் வினாடி-வினா போட்டியும், பேச்சுப்போட்டியும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நடப்பாண்டுத் தலைவர் திரு. ஷேக் தாவூத் அவர்கள், தலைமையுரையாற்ற விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு. அஹமது கபீர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய பன்னாட்டுப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற தமிழ் மாணவ, மாணவியரையும், தனித்திறன் சாதனை செய்தவர்களையும், குறும்படம் தயாரித்து அனுப்பியதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் தொடங்கி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் கேடயம் கொடுத்து பாராட்டியது.
கூடுதலாக, தமிழ் மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், தமிழ் அறிவினை வளர்த்துக்கொள்ளவும் இந்திய மதிப்பில் சுமார் 40,000 ரூபாய்க்கான தமிழ்ப் புத்தகங்கள் 8 இந்திய பன்னாட்டுப் பள்ளிகளுக்கும் அன்பளிப்பாக அளித்ததோடு, அனைத்து தமிழாசிரியர்களையும் பரிசில்கள் கொடுத்து ரியாத் தமிழ்ச் சங்கம் கவுரவித்தது.
சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டியில், முதலிடத்தை: Al-Yara International School சேர்ந்த மாணவி ஹாஜிரா பிர்தவ்ஸ் அவர்களும், இரண்டாம் இடத்தை International Indian School சேர்ந்த மாணவர் சுதிர் ரமேஷ் அவர்களும், மூன்றாம் இடத்தை Modern Middle East School சேர்ந்த மாணவர் முகிலேஷ் ராஜேஷ் குமார் அவர்களும் பெற்றுச் சென்றனர்.
பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டியில், முதலிடத்தை : Delhi Public School மாணவி லாமியா பஷீர் அவர்களும், இரண்டாமிடத்தை New Middle East மாணவர் முஹம்மது ஹிஷாம் அவர்களும், மூன்றாம் இடத்தை Al-Aliya Int'l School மாணவர் தருண் ஆதித்யா அவர்களும் பெற்றுச் சென்றனர்.
வினாடி-வினா நிகழ்வில்: முதலிடத்தை New Middle East School மாணவர்களும், இரண்டாமிடத்தை International Indian Public School மாணவர்களும், மூன்றாமிடத்தை Al-Aliya International School மாணவர்களும் தட்டிச் சென்றனர்.
மாறுவேடப் போட்டியில், திருப்பூர் குமரனாக வந்த ஆதில் தமீமுல் முதலிடத்தையும், விவசாயியாக வந்த இர்ஷாத் செய்யத் அஹமத் இரண்டாமிடத்தையும், வீரபாண்டியராக வந்த கீதேஷ் தியாகராஜன் மூன்றாமிடத்தையும் தட்டிச் சென்றனர்.
நடப்பாண்டு செயலாளர் திரு. ஜியாவுதீன் அவர்கள் நன்றி நவில, சிற்றுண்டியுடன் விழா இனிதே நிறைவுற்றது.