துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
துபாய்: இந்திய தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
2020 ஆம் ஆண்டில், சந்தேக நபரால் ஒரு இந்திய தம்பதியினர் பலமுறை கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு குற்றவாளி தொழிலதிபரின் வில்லாவில் பணிபுரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி வசிக்கும் துபாயில் உள்ள வில்லாவிற்குச் சென்று, தரை தளத்தில் இருந்து 1,965 திர்ஹம்களை திருடியுள்ளார். பின்னர் மேலும் திருடுவதற்காக தம்பதியரின் படுக்கையறைக்கு சென்றுள்ளார். சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த தொழிலதிபர் எழுந்தவுடன், குற்றவாளி அவரை படுக்கையில் பலமுறை கத்தியால் குத்தினார்.
தொழிலதிபரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடது தோள்பட்டையில் 10 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி தலை, கழுத்து, மார்புப் பகுதிகளில் 14 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். தம்பதியின் மகளின் கழுத்தில் கத்தியால் அந்த நபர் குத்தியதால் அவர் பலத்த காயம் அடைந்தார். காயமடைந்த மகள் போலிசாருக்கும், தந்தையின் நண்பருக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீவிரமாக விசாரித்து குற்றவாளியை துபாய் போலீஸ் கைது செய்தது. குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொண்டார். இதையடுத்து குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றமும் அந்த தண்டனையை உறுதி செய்தது.