ஒற்றை பெயர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் யுஏஇக்கு வரலாம்! - ஏர் இந்தியா அறிவிப்பில் மாற்றம்!

ஒற்றை பெயர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் யுஏஇக்கு வரலாம்! - ஏர் இந்தியா அறிவிப்பில் மாற்றம்!

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணம் செய்யும் விருந்தினர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் முதன்மை (First Name) மற்றும் இரண்டாம் நிலை (Surname) பெயர்கள் இருப்பதையும், அது வெவ்வேறாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனைத்து டிராவல்ஸ் முகவர்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், பாஸ்போர்ட்டில் ஒரே பெயர் உள்ளவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என யுஏஇ நேசனல் அட்வான்ஸ் இன்ஃபார்மேஷன் செண்டரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புதிய வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு,  ஏர் இந்தியா நிறுவனம் திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையை அனைத்து டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும்அனுப்பியுள்ளது.

புதிய சுற்றறிக்கையில் பாஸ்போர்ட்டில் ஒரே ஒரு பெயர் (இயற்பெயர் அல்லது குடும்பப்பெயரில் ஒரு சொல்) உள்ளவர்கள்  பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தில் தந்தையின் பெயர் அல்லது குடும்பப்பெயர் இருந்தால் அவர்கள் வருகையாளர் விசாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நுழையலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

பாஸ்போர்ட்டில் பெயரில் ஒரே ஒரு பெயர் மட்டுமே இருந்தாலும் பாஸ்போர்ட்டின் இரண்டாவது பக்கத்தில் தந்தை அல்லது குடும்பத்தின் பெயர் இருந்தால் பார்வையாளர் விசாவில் நுழைய அனுமதிக்கும் புதிய தளர்வு பலருக்கு நிம்மதியை அளித்துள்ளது.