புதிதாக 10 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்யும் கத்தார் ஏர்வேஸ்..!
FIFA-2022 உலக கோப்பை போட்டியைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் கத்தார் நாட்டிற்கு வருவார்கள் என்பதால், அதிகளவு பயணிகளின் வருகையைக் கையாள்வதற்காகவும், தொற்று நோய்க்குப் பிந்தைய விமான நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கும் ஏற்ப கத்தார் ஏர்வேஸ் கூடுதலாக 10000 ஊழியர்களை உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கத்தார் தலைநகரமான தோஹாவை மையமாக கொண்டு இயங்கும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை தற்போது 45,000 இலிருந்து 55,000 க்கும் அதிகமாக உயர்த்த உள்ளது.
இதுகுறித்து நிறுவனம் ஒரு அறிக்கையில் "கொரோனாவிற்குப் பிறகு கத்தார் ஏர்வேஸ் வளர்ச்சிப் பாதையில் உள்ளது மற்றும் உலகக் கோப்பைக்கான செயல்பாடுகள் முழு வீச்சில் இருப்பதால், விமான நிறுவனம் வேலைக்கு ஆட்சேர்ப்புகளை அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய பணியிடங்களில் வேலை நிரந்தரமாக இருக்குமா என்பது குறித்த தகவலை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் கூற மறுத்துவிட்டது.
மேலும் செப்டம்பர் மாத இறுதியில் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளில் ஆட்சேர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த உலக கோப்பை போட்டியின் போது, கத்தார் ஏர்வேஸ் தனது விமான பயண நேர அட்டவணையில் 70 சதவீதத்தை சரிசெய்து, தோஹாவிற்கு கூடுதல் விமானங்கள் வருவதற்கு வழிவகை செய்து வருகிறது. அதே போல் மற்ற விமான நிறுவனங்கள் கத்தாருக்கான விமானங்களை கணிசமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.