சவூதியில் கோவிட் விதிமீறல் அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்த இறுதி எச்சரிக்கை!

சவூதியில் கோவிட் விதிமீறல் அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்த இறுதி எச்சரிக்கை!

ரியாத்: சவுதி அரேபியாவில், கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக தனிநபர்களுக்கு விதிக்கப்பட்ட 10,000 ரியால் அபராதம் 15 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்; தவறினால் புகார் வாரியத்தில் (தீவானுல் மதலிம்) வழக்கு பதிவு செய்யப்படும் என்று தேசிய அத்துமீறல் தளம் (EFA) எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக 10,000 ரியால் அபராதம் பெற்றவர்கள் உடனே செலுத்துமாறு அவர்களின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதேநேரம், ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த அபராதத் தொகையை 15 நாட்களில் எப்படிச் செலுத்துவது என்று அபராதத் தொகை பெற்றவர்கள் கவலையடைந்துள்ளனர்.

கோவிட் காலத்தில், முகமூடி அணியாதது மற்றும் அனுமதியின்றி வெளியே செல்வது போன்ற விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் அபராதம் குறித்த செய்தி வந்தாலும் இகாமாவை புதுப்பிக்கவோ, ரீ என்ட்ரி, ஃபைனல் எக்ஸிட் செல்லவோ எந்த தடையும் இல்லை. இதனால், பலர் அபராதம் செலுத்தாமல் உள்ளனர்.

கோவிட் பரவல் முடிந்து நிபந்தனைகள் திரும்பப் பெற்றவுடன் இந்த அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அபராதத்தை 15 தினங்களுக்குள் கட்ட வேண்டும் என இறுதி எச்சரிக்கை வந்ததும் அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.