பதிவேடுகளில் ஏற்பட்ட தவறால் ஒரு ஆண்டுக்கும் மேலாக சவுதி சவக்கிடங்கில் கிடந்த இந்தியரின் உடல்!
ரியாத்: மாரடைப்பால் ஓராண்டுக்கு முன் இறந்த பீகாரைச் சேர்ந்தவரின் உடல் சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் கொண்டு வரப்பட்டது. பீகாரைச் சேர்ந்த நாகேந்திர சிங் (37) என்பவர் 14 மாதங்களுக்கு முன்பு தெற்கு சவுதி அரேபியாவின் அபாஹாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள மடா பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர், உடல் மொஹைல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
சமூக சேவகரும், ஜித்தா இந்திய துணை தூதரகத்தின் தொண்டு குழு உறுப்பினருமான அஷ்ரப் குடிச்சல் கூறுகையில், இறந்தவரின் பதிவேடுகளிலும், இறந்தவரின் வாரிசுகளிலும் தவறான தகவல் பதிவு செய்யப்பட்டதால், இறந்தவரின் உடல் மீது தொடர் நடவடிக்கை எடுக்க இவ்வளவு காலம் ஆனது. அவரின் ஆதரவாளர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக முதலாளியோ அல்லது உரிமைகோருபவர்களோ தொடர்பு கொள்ளாததால், மருத்துவமனை அதிகாரிகள் ஆசீர் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்தவரின் பதிவேடுகளில், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோப்பில் இகாமாவோ, பாஸ்போர்ட் நகலோ இல்லாததால், சவுதி இமிகிரேஷன் உதவியுடன் கைரேகையை சோதித்தபோது அவர் இந்தியர் என தெரியவந்தது. பின்னர் மடா போலிஸ் தலைவர், சமூக ஆர்வலரான அஷ்ரப் குடிச்சிலனிடம் இறந்த நபர் யார் என்பதைக் கண்டறிய உதவி கோரினார்.
ஜாவாஸில் கிடைத்த தகவலின் மூலம் முதலாளியின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது, ஸ்பான்சர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபைனல் எக்சிட் விசா மற்றும் பாஸ்போர்ட்டை சேகரித்து வீடு திரும்பியிருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும், நாகேந்திர சிங் இறந்தது குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
பின்னர், இந்திய துணைத் தூதர் நமோ நாராயண் மீனாவின் உதவியுடன், இந்திய துணைத் தூதரகத்தின் தொண்டுப் பிரிவினர், அவரது பாஸ்போர்ட்டில் உள்ள ஆவணங்களில் இருந்து இறந்தவரின் முகவரியைச் சேகரித்து, இறந்தவரின் குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.
தூதரக அதிகாரி ஃபைசல், நாகேந்திர சிங்கின் மனைவியிடமிருந்து ஒப்புதல் படிவத்தைப் பெற்று, உடலை வீட்டிற்கு அனுப்ப அஷ்ரப் குச்சிக்கலை நியமித்தார். பயண ஆவணமாக துணைத் தூதரகத்தில் இருந்து அவசர கடவுச்சீட்டையும், அபாஹாவில் உள்ள நாடு கடத்தல் மையத்தில் இருந்து இறுதி வெளியேறும் விசாவையும் பெற்று, உடல் வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
உடலைத் திருப்பி அனுப்புவதற்கான முழுச் செலவையும் தூதரகம் ஏற்றுக்கொண்டது. புதன்கிழமை, உடல் அபாஹாவிலிருந்து சவுதி விமானத்தில் ரியாத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து பாம்பே வழியாக ஏர் இந்தியா விமானம் மூலம் வியாழக்கிழமை பாட்னாவை வந்தடைந்த உடல், உறவினர்களால் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.