வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதீனா ‘குபா’ மஸ்ஜிதை விரிவுப்படுத்தும் திட்டம் தொடக்கம்!
ஜித்தா: மதீனாவில் உள்ள குபா மஸ்ஜிதை விரிவுபடுத்தும் திட்டத்துக்காக நிலம் மற்றும் கட்டிடங்களை விட்டுக் கொடுப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மதீனா வட்டார வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நிலத்தில் வசிப்பவர்கள் காலி செய்து, உரிமைச் சான்று மற்றும் இறுதி அனுமதி ஆவணங்களை நீர் மற்றும் மின்சாரத் துறையிடம் சமர்ப்பிக்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் காலத்திலிருந்து பல்வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் மூலம் குபா பள்ளிவாசல் இன்றைய நிலையை அடைந்துள்ளது.
மஸ்ஜிதின் தற்போதைய பரப்பளவு 5,035 சதுர மீட்டர். ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போதைய கொள்ளளவை பத்து மடங்கு அதிகரித்து 50,000 சதுர மீட்டராக உயர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டம் நிறைவடையும் போது, ஒரே நேரத்தில் 66,000 தொழுகையாளர்களுக்கு இடமளிக்கும் திறன் மஸ்ஜிதில் இருக்கும். குபா மஸ்ஜிதின் வரலாற்றில் இது மிகப்பெரிய வளர்ச்சித் திட்டமாகும். இந்த விரிவாக்கம் மஸ்ஜிதின் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, புதிய வளர்ச்சித் திட்டமானது வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கிணறுகள் மற்றும் தோட்டங்கள் உட்பட சுமார் ஐம்பத்தேழு இடங்களை புதுப்பிப்பதையும் உள்ளடக்கும்.