கனமழைக்கு எச்சரிக்கையின் போது பணியாளர்களை பணியிடத்தை அடையும்படி கட்டாயப்படுத்த கூடாது! - சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம்

கனமழைக்கு எச்சரிக்கையின் போது பணியாளர்களை பணியிடத்தை அடையும்படி கட்டாயப்படுத்த கூடாது! - சவுதி தொழிலாளர் துறை அமைச்சகம்

ரியாத்: கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அல்லது பிற அரசுத் துறைகள் எச்சரிக்கும் போது அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை பணியிடங்களுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று சவுதி தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஊழியர்களின் பாதுகாப்பு விஷயத்தில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில மாகாணங்களில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நேரத்தில், தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் உடல்நலம், தொழில் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய பரிந்துரைக்கிறது. ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று சமூக மேம்பாட்டு அமைச்சகம் நினைவூட்டியது. 

பல்வேறு மாகாணங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் புழுதிப் புயல் உள்ளிட்ட வாய்ப்புகள் கணிக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் தெரிவுநிலை குறையும் என்றும் எச்சரிக்கை கூறுகிறது. சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. ஜித்தா மற்றும் மக்காவில் பலத்த மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.