பஹ்ரைன்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழக பெண் அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்!
பஹ்ரைனில் வீட்டு வேலைக்கு சென்று 10 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பஹ்ரைனில் உள்ள அன்னை தமிழ் மன்றத்தினர் விமானத்தில் சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா மணப்பத்தூரை சேர்ந்தவர் செல்வநாயகி. இவர் வீட்டு வேலை செய்வதற்காக பஹ்ரைன் நாட்டிற்கு சென்றார். 10 ஆண்டுகளாக செல்வநாயகி பஹ்ரைனில் தங்கி வேலை செய்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் தனது உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் தான் திடீரென்று செல்வநாயகிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அடைப்பட்டன. செல்வநாயகி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சுயநினைவில்லாத நிலையில் சல்மானியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை ஓரளவு பலன் அளித்தது. இதனால் அவரது உடல் நலனில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டது. இருப்பினும் அவரால் சுயமாக எழுந்து உட்காரவோ, பேசவோ இயலவில்லை. இந்த நிலையில் பஹ்ரைனில் பல்வேறு சமூக நற்பணிகளை செய்து வரும் அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர் தாமரைக்கண்ணனை, செல்வநாயகியின் உறவினரான சங்கர் வேலு தொடர்பு கொண்டு பேசினார். செல்வநாயகியை ஊருக்கு அனுப்பி வைக்க உதவி செய்யும்பட அவர் கோரிக்கை வைத்தார். இதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் ஜிகே அறிவுரைப்படி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து மருத்துவமனை சென்று செல்வநாயகியின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தனர். செல்வநாயகி இந்தியா வர வேண்டுமானால் விமானத்தில் படுக்கை வசதி இருந்தால் மட்டுமே முடியும். இதனால் விமான பயண செலவு மிகவும் அதிகம் ஏற்படும்.
இருப்பினும் செல்வநாயகி சொந்த ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளையும், சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்திய தூதரகத்தின் உதவியோடும் பஹ்ரைனில் வெளிவரும் 'டெய்லி ட்ரிப்யூன்' என்ற பத்திரிகை வாயிலாக செய்தி வெளியிட்டனர். மேலும் சில முக்கிய முயற்சிகளையும் செய்தனர். இதையடுத்து பல பேரின் உதவியுடன் செல்வநாயகி கடந்த 6ம் தேதி இரவு பஹ்ரைனில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சென்னை விமான நிலையம் வந்த அவர் சமூக நலத்துறை செயலாளர் பழனிசாமி ஏற்பாட்டால் அங்கிருந்து ஆம்புலனஸில் அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்வநாயகி தாயகம் திரும்பியதற்கு பலபேர் உதவி செய்துள்ளனர். குறிப்பாக சல்மானியா மருத்துவமனை, தமிழகத்தில் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் ஆம்புலன்ஸ் வசதி கொடுத்தது. இதுதவிர தமிழக அரசுக்கும், உதவி செய்த அனைவரும் பஹ்ரைன் அன்னை தமிழ் மன்றம் நன்றி தெரிவித்துள்ளது.