பயமுறுத்தும் ஆடைகளை அணிந்தால் நுழைவு இலவசம்! - புதிய சலுகையுடன் ரியாத் பவுல்வர்டு நகரம்
ரியாத்: பயமுறுத்தும் ஆடைகளை அணிந்தால் ரியாத்தின் பவுல்வர்டு நகரத்திற்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. சவுதி பொது பொழுதுபோக்கு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுபோன்ற சலுகை இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 'திகில் வார இறுதி' கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள சூழலில், பயமுறுத்தும் ஆடைகளை அணிபவர்களுக்கு இந்த சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
பயமுறுத்தும் ஆடைகளை தயார் செய்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்த Boulevard Cityக்கு அனைவரையும் வரவேற்கிறோம் என்று சவுதி பொது பொழுதுபோக்கு ஆணையம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. மூன்றாவது ரியாத் சீசன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ரியாத்தில் உள்ள Boulevard City தனது செயல்பாடுகளை கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
ரியாத் சீசன் திருவிழா என்பது சவூதி அரேபியாவில் உள்ள பருவங்களுக்கு ஏற்ப பொது பொழுதுபோக்கு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பருவகால திருவிழாக்களின் ஒரு பகுதியாகும்.
ரியாத் சீசன் திருவிழா கலை, கலாச்சாரம், பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றின் மூன்று மாத கொண்டாட்டமாகும். இன்று இரவு உலகப் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞர் பிட்புல்லின் கச்சேரி விழாவுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. பின்னர் ரியாத் நகரில் கலைஞர்களின் பேரணி நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் 14 அரங்குகளில் விழா நடைபெறவுள்ளது.
மூன்று மாதங்கள் நடைபெறும் இந்த விழாவில், லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் கண்காட்சிக்கு வருவார்கள். இந்த ஆண்டு திருவிழாவில் இரண்டு கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியாத் நகரின் பல்வேறு இடங்களில் 7500 கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். மேலும் பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன.