குவைத் வெள்ளி சந்தையில் ரெய்டு! - வர்த்தகர்கள் உட்பட 93 வெளிநாட்டவர்கள் கைது!
குவைத் சிட்டி: தொழிலாளர் மற்றும் குடியிருப்பு சட்டங்களை மீறுபவர்களைக் கண்டறிய குவைத்தில் உள்துறை அமைச்சகம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 93 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் தொழிலாளர் சட்டங்களை மீறி பணிபுரிந்தவர்களும் குடியுரிமை சட்டத்தை மீறியவர்களும் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சமீப மாதங்களில், தொழிலாளர் மற்றும் குடியிருப்பு சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும் நோக்கில் அதிகாரிகள் குவைத்தின் பல்வேறு பகுதிகளில் விரிவான சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் செயல்முறை முடிந்ததும் நாடு கடத்தப்படுவார்கள். வேறு எந்த விசாவிலும் அவர்கள் குவைத் திரும்ப முடியாது.