அமீரகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் தேசிய அடையாளத்தை சரியாக பராமரிக்க வழிகாட்டுதல்கள் வெளியீடு! - மீறினால் அபராதம்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தனியார் பள்ளிகள் நாட்டின் தேசிய அடையாளத்தை சரியாக பராமரிக்க சில வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு ஐக்கிய அரபு அமீரக கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மீறும் பள்ளி அதிகாரிகளுக்கு அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பொதுவான நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை பள்ளிகளிலும் அதைச் சுற்றியுள்ள மாணவர்களும் ஊழியர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சின்னங்களும் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பள்ளி இருக்கும் எமிரேட்டின் நிர்வாகிகளின் அதிகாரப்பூர்வ படங்களை கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய கீதம் மட்டுமே காலை கூட்டத்தில் இசைக்கப்பட வேண்டும். பட்டியலிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மட்டுமே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொடி பள்ளியில் பறக்கவிடப்பட வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளைத் தவிர வேறு நபர்களின் படங்கள் அல்லது பிற சின்னங்களைப் பயன்படுத்த கூடாது. பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தேவையான அனுமதிகளை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சட்டங்கள், மதிப்புகள் மற்றும் கொள்கைகளை பாடத்திட்டத்திலோ அல்லது வேறுவிதமாகவோ மீறவில்லை என்பதையும் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.