ஸ்பான்சர்களின் கீழ் பணிபுரியாத வெளிநாட்டவர்களுக்கு சவுதி எச்சரிக்கை..!
ரியாத்: சொந்த ஸ்பான்சர்களின் கீழ் பணிபுரியாத வெளிநாட்டவர்களுக்கு எதிராக சவுதி அரேபிய பொது பாதுகாப்பு துறை மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறானவர்களுக்கு எதிராக நாடு கடத்தல் உள்ளிட்ட தண்டனைகள் அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர் இல்லாமல் வெளிநாட்டில் பணிபுரியும் அல்லது சட்டவிரோதமாக தங்கள் சொந்த தொழிலை நடத்தும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான எச்சரிக்கை இதுவாகும்.
சுயதொழில் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 50,000 ரியால்கள் வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதவிர, சொந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட தொழிலாளர்களை வேறு இடங்களில் வேலை செய்ய அனுமதிக்கும் ஸ்பான்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முன்னதாக எச்சரித்திருந்தது. 1 லட்சம் ரியால் வரை அபராதமும், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புதிய பணியாளர்களைச் சேர்ப்பது தடைசெய்யப்படும்.
எல்லை பாதுகாப்பை மீறுபவர்களுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வேலை, தங்குமிடம் அளிப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 10 லட்சம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், பயண உதவி வழங்கிய வாகனம், தங்கும் வசதியுடன் வழங்கப்பட்ட கட்டடம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.