அமீரகத்தில் வாகனம் ஓட்டும்போது உணவு உண்பதும் விதிமீறல் குற்றமே.!
அமீரகத்தில் பலரும் தங்களுடைய வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு ஓடும்போது காலை உணவைக் கூட தவறவிடுவார்கள். ஆனால் சில ஓட்டுநர்கள் நேரத்தை மிச்சப்படுத்த காபி மற்றும் பிற தின்பண்டங்களை ஓட்டும்போது சாப்பிடுகிறார்கள்.
இது பொதுவான காட்சியாகிவிட்டதால், போக்குவரத்து விதிமீறல்களில் இருந்து இந்தச் செயலுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
ஆனால் இது உண்மையில் சட்டத்தின் கடுமையான மீறல் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வாகனம் ஓட்டும்போது சாப்பிடுவது அல்லது குடிப்பது கவனச்சிதறல் மற்றும் விபத்துகளுக்கு வழிவகுக்கும். இந்த விதிமீறல் வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது போன்ற தீவிரமானது.
மது அருந்துதல், புகைத்தல் உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் அனைத்தும் சட்டத்தை கடுமையாக மீறுவதாகும். அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் வாகனம் ஓட்டும் போது சாப்பிடுவது விபத்து அபாயத்தை 80 சதவீதம் அதிகரிக்கிறது என்று எச்சரிக்கிறது.
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2021-ல் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளில் 13 சதவீத விபத்துகள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்டவை. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் அனைத்தும் சட்டவிரோதமானது.
மொபைல் பயன்பாடு, இணையத்தில் உலாவுதல், குறுஞ்செய்தி அனுப்புதல், வாகனம் ஓட்டும்போது புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது, மேக்கப் போடுவது போன்ற அனைத்தும் இந்த வகைக்குள் அடங்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
அப்படி மீறுபவர்களுக்கு 800 திர்ஹாம் அபராதமும், நான்கு பிளாக் பாயிண்டுகளும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.