அபுதாபியில் கார்பன் வாயுவை குறைக்க 1 மில்லியன் மரங்களுடன் உருவாகும் மாங்குரோவ் காடுகள்!
அபுதாபி: அபுதாபியில் கரியமில வாயுவை குறைக்கும் வகையில் ஒரு மில்லியன் சதுப்புநில மரங்கள் நடப்படுகின்றன. தனியார் துறையின் பங்களிப்புடன் பாலைவனத்தை பசுமையாக்கும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அபுதாபி சுற்றுச்சூழல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அறிவிக்கப்பட்ட நிகர பூஜ்ஜிய கொள்கைக்கு வேகத்தை கொடுக்கும்.
ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கொள்கை திட்டமிடல் இயக்குனர் அப்துல்லா அல் ருமைதி கூறுகையில், “கார்பன் வெளியேற்றத்தை தடுக்க சதுப்புநிலங்கள் இயற்கையான வழியாகும். பல மடங்கு அதிக கார்பனை சேமிக்கும் திறன் கொண்டவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனியார் துறையும் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், “காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். எனவே புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த பாரிஸ் ஒப்பந்தத்தை அங்கீகரித்து கையெழுத்திட்ட மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் (MENA) முதல் நாடுகளில் UAE ஒன்றாகும். இப்பகுதியில் நெட் ஜீரோ 2050 திட்டத்தை அறிவித்த முதல் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அடுத்த காலநிலை உச்சிமாநாட்டை நடத்துவதற்கு முன்னதாக, அனைத்து துறைகளிலும் சுற்றுச்சூழல் நட்பு அமைப்பைத் தயாரிப்பதில் அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், அமீரக தேசத் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் 1970 களில் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி ஒரு நல்ல முன்மாதிரியைத் தொடங்கினார். இதே பாதையை மற்ற ஆட்சியாளர்களும் பின்பற்றுகின்றனர் என்றார்.
தனியார் நிறுவனங்கள்
இதன் ஒரு பகுதியாக, அபுதாபி ஜுபைல் தீவு முதலீட்டு நிறுவனம், 10 ஆண்டுகளுக்குள் தீவில் 1 மில்லியன் சதுப்புநில மரங்களை நடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 4000 ஹெக்டேர் சதுப்புநிலங்கள் உள்ளன. இதில் 2500 ஹெக்டேர் அபுதாபியில் உள்ளது.
பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், வனவிலங்குகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை வழங்குதல், கார்பன் மாசுபாட்டைக் குறைத்தல், சுத்தமான காற்றை உறுதி செய்தல் மற்றும் நீர்வழிகள் மற்றும் கரையோரங்களில் அரிப்பைத் தடுப்பது ஆகியவை மற்ற இலக்குகளில் அடங்கும். இதன் மூலம் சதுப்பு நிலப் பகுதிகளைப் பாதுகாப்பதோடு புதிய நீர் பிடிப்புப் பகுதி உருவாக்கப்படும். இதனால் நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.